

புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தின் நவ்கான் மக்களவை தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் சங்கராவ் வெற்றிபெற்றார். அதேபோல் நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஹசி ராணி வெற்றிபெற்றார். அசாம் மாநிலம் நவ்கான் மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் பா.ஜ.க. வேட்பாளர் தேவசிஷ் சர்மா வெற்றி பெற்றார்.
இதே போல் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ.அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மக்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு நன்றி! அசாமின் நாகோன் மக்களவைத் தேர்தல் முடிவுகளும், மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், பா.ஜ.க.-என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சித் திட்டத்துடன் மக்களுக்கு ஆழமான பிணைப்பு உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.
வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். பா.ஜ.க. தொண்டர்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். புதுச்சேரி தட்டஞ்சாவடியில் வெற்றி பெற்ற என்.டி.ஏ. கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்
மக்களின் நலனுக்காக, அவர்களின் ஒளிமயமான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக நாம் அயராது உழைக்கும்போது, இந்த இடைத்தேர்தல் முடிவு நமக்குக் கூடுதல் பலம் அளிக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.