தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பானை சின்னம் புகழ் பெற்ற சின்னமாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு தலைவர்களுக்கு நான் பிரசாரம் செய்துள்ளேன். இன்று(நேற்று) என் வாழ்வில் ஒரு பொன்னாள். இன்று(நேற்று) தான் முதன்முதலாக திருமாவளவனுக்காக நான் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். திருமாவளவனை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பூசி குறித்து பயத்தை போக்கி கோவிட் வார்ட்டுக்கு சென்ற ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். ஆட்சி அமைத்தவுடன் கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் திட்டத்தை செயல்படுத்தினார். மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திராவிட மாடலின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல கியாஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு வராதவர் கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடாமல் பயந்து போய்விட்டார். தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது. மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றார். புதிய இந்தியா பிறக்கும் என்றார். யாராவது புதிய இந்தியாவை பார்த்தீர்களா?.

தமிழ்நாட்டின் இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு ஒரு பைசாக்கூட கொடுக்கவில்லை. மேலும் மோடி, கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார். ஆனால் 15 பைசா கூட கொடுக்கவில்லை. 'நீட்' தேர்வால் 22 மாணவர்கள் தமிழ்நாட்டில் பலியாகினர். இதற்கு பா.ஜனதா பதில் சொல்ல வேண்டும். கூட இருந்த அ.தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். அதற்கான நேரம் தான் ஏப்ரல் 19-ந் தேதி. இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளை வென்று கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுப்போம்.

2021-ல் அடிமைகளை விரட்டினோம். இந்த ஆண்டில் அடிமைகளின் உரிமையாளர்களை தேசிய அளவில் விரட்டுவோம். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com