

சென்னை,
தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, ஸ்ரீ சரஸ்வதி, முன்னாள் மேயர்(பொறுப்பு) கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
நகராட்சி நிர்வாகங்கள் தங்களது வரி விதிப்புகளை ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் என்று தான் 15-வது நிதி குழுவின் அறிக்கையில் மத்திய அரசு கூறியிருந்தது. சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று அதில் எந்த இடத்திலும் மத்திய அரசு குறிப்பிடவில்லை.
ஆனால், தமிழகத்தில் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா காலகட்டம் முடிந்து, நிலைமை சீராகும் வரை, சொத்துவரி உயர்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் துரைசாமி, சக்கரவர்த்தி, தமிழக பா.ஜ.க இளைஞரணி பொருளாளர் ஜி.சுரேஷ் கர்ணா மற்றும் மாவட்ட தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் கோஷம் எழுப்பிய போது, திடீரென சிலர் மத்திய அரசை கண்டிக்கின்றோம் என கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.