

சென்னை,
தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற நிலை மாறிவிட்டது என்றும், தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமையும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் வி.பி.துரைசாமி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன. வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு என எந்த விவகாரத்திலும் மத்திய அரசு தவறாக செல்லவில்லை. பொய் பிரசாரம் மூலம் மக்களை திசை திருப்ப வேண்டாம்.
மு.க.ஸ்டாலினை நான் கேட்டுக்கொள்வது, நீண்ட காலமாக சாதியை, மொழியை சொல்லி அரசியல் செய்து விட்டீர்கள், இனி இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தி.மு.க. அதிக எம்பிக்களை கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில் அவர்கள் தான் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதை விட, பொதுவெளியில் வந்து தான் அதிகம் பேசுகின்றனர். வெளிநடப்பு செய்வதை மட்டுமே முதல் காரியமாக அவர்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற நிலை இருந்து வந்தது. இப்போது நிலைமை மாறி உள்ளது. அதாவது தி.மு.க. - பா.ஜனதா என்ற நிலை உருவாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எந்த கட்சிகள் அனுசரித்து செல்கின்றனவோ அவர்களுடன் தான் கூட்டணி. தேசிய கட்சியான பா.ஜனதா தலைமையில்தான் ஆட்சி நடைபெறும். பா.ஜனதாவுக்கு தி.மு.க.விலிருந்து நிறைய பேர் வருவார்கள். நீங்கள்(பத்திரிகையாளர்கள்) ஆச்சரியப்படுவீர்கள், அவர்களும் (தி.மு.க.) அதிர்ச்சியாவார்கள்.
இவ்வாறு வி.பி.துரைசாமி கூறினார்.