மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்-கனிமொழி எம்.பி. பேச்சு

மதம், மொழி, இனத்தால் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்-கனிமொழி எம்.பி. பேச்சு
Published on

மகளிர் அணி அறிமுக கூட்டம்

தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சியில் உள்ள கருணாநிதி அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மகளிர் அணி துணை செயலாளரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர் தமிழரசி எம்.எல்.ஏ., மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன் (மேற்கு), மதிவாணன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை பொதுச்செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கூட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மக்கள் தொகை குறைவு

கூட்டத்தில், கனிமொழி எம்.பி. பேசும்போது கூறியதாவது:- பெண் விடுதலை, பெண்களுக்கான உரிமையை காக்க இன்றைக்கு திராவிட கழகமும், தி.மு.க.வும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி மகளிர் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்தவர் கருணாநிதி. 33 சதவீதம் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அப்போதே கருணாநிதி ஏற்படுத்தி கொடுத்தார். அவர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளார். தமிழகம் இன்றைக்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தமிழகம் கல்வி, வேலைவாய்ப்பில் மக்கள் அதிகளவு முன்னேறி வருவதால், இங்கு மக்கள் தொகை குறைந்து காணப்படுகிறது. இதனால், தொகுதி மறுவரையறை செய்யும் போது தமிழகம் போன்ற மாநிலங்கள் பாதிப்பு அடையும்.

இந்தியா கூட்டணியை பார்த்தாலே பா.ஜனதாவுக்கு பயம் வருகிறது. மதம், மொழி, இனம் போன்றவற்றில் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. எனவே அதனை முறியடிக்க பெண்களாகிய நாம் போராட வேண்டும். வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் நீங்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெறும் கண்துடைப்பு தான்

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு தான் அமல்படுத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, தொகுதி மறுசீரமைப்பு எப்போது செய்து இது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. அதனால், இந்த மசோதா நிறைவேற்றம் வெறும் கண்துடைப்பு தான்.

பா.ஜனதாவினர் எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து அச்சுறுத்தல்களை செய்து வருகின்றனர். பா.ஜனதா கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியிருப்பது, அவர்களின் சுயமரியாதை பிரச்சினை. இப்போதைக்கு பிரிந்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கின்றனர். எவ்வளவு நாள் இந்த உணர்வு இருக்கும் என்று தெரியவில்லை.

மகளிர் உரிமை மாநாடு

சென்னையில், வருகிற 14-ந்தேதி இந்தியா கூட்டணியில் உள்ள பெண் தலைவர்களை அழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம். மகளிருக்கு அங்கீகாரம் இன்னும் அதிகமாக வேண்டும். தேர்தலில் மகளிருக்கு இன்னும் அதிகமாக வாய்ப்புகள் வழங்க வேண்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

அதேசமயம், தேர்தலின் போது, அதிக வெற்றி வாய்ப்பு, கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆலோசித்து தலைமை முடிவெடுக்கும். நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, காவிரி பிரச்சினை பற்றி பேசியிருக்கிறார். முதல்-அமைச்சர் கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காவிரி பிரச்சினையில் நிச்சயமாக மத்திய அரசு நியாயத்தின் (தமிழகத்தின்) பக்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக மகளிர் அணி துணை செயலாளர் பவானி ராஜேந்திரன் வரவேற்று பேசினார். முடிவில் மகளிர் அணி பிரசாரக்குழு உறுப்பினர் அமலு எம்.எல்.ஏ. நன்றி கூறினார். கூட்டத்தில் மாநகராட்சி மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், முன்னாள் கவுன்சிலர் டாக்டர் தமிழரசி சுப்பையா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com