பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலின் இன்றைய சென்னை பயணம் ரத்து

சென்னையில் இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலின் இன்றைய சென்னை பயணம் ரத்து
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களான அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பது சென்னையிலா?, டெல்லியிலா? என்ற விவாதமும் சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாக மாறி போனது. இந்த நிலையில், அ.தி.மு.க.-பாஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லிக்குச் செல்வதில் என்ன தவறு வந்து விட்டது?. டெல்லியில் வைத்து எவ்வித கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அவர்கள் எதற்காக டெல்லி சென்றார்கள் என்ற உண்மை நிலவரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?.

உண்மையில், முதல்-அமைச்சருக்கு தமிழகத்தில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், விளாத்திக்குளத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பாரா? மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால், முதல்-அமைச்சருக்கு அதுவும் தெரியவில்லை. இன்று (சனிக்கிழமை) மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழகம் வருகிறார். அவர் வந்தவுடன், எங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நாங்கள் முறைப்படி தொடங்குவோம். நான் டெல்லிக்குச் செல்லவில்லை. மாறாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் (பியூஸ்கோயல்) தான் சென்னை வருகிறார். எனவே, எங்கள் தரப்புப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சென்னையில்தான் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலின் இன்றைய சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சென்னையில் இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டணி கட்சி தலைவர்களான அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளநிலையில், பியூஷ் கோயலின் இன்றைய சென்னை பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com