

கோவை,
கோவை மருதமலை அடிவாரம் பகுதிகளில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனி மற்றும் கணுவாய் மலைப்பகுதிகளில், பாறை மீது கருஞ்சிறுத்தை ஒன்று நடந்து செல்லும் காட்சியை உள்ளூர் மக்கள் தங்களது செல்போனில் தூரத்திலிருந்து பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் இப்பகுதியில் சாதாரண சிறுத்தை ஒன்று ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது கருஞ்சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ காட்சிகள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ பதிவு செய்யப்பட்ட துல்லியமான இடம் எது, அதில் இருப்பது உண்மையாகவே கருஞ்சிறுத்தையா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, மலையடிவாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவு மற்றும் மாலை நேரங்களில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகளைக் கண்டால் அவற்றுக்கு இடையூறு செய்யவோ, விரட்ட முயற்சிக்கவோ கூடாது. விலங்குகளின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்பகுதியில் கூண்டு வைத்து கருஞ்சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.