தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்

பொய்த்துப்போன பருவமழையால் சாயல்குடி அருகே தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்
Published on

சாயல்குடி, 

பொய்த்துப்போன பருவமழையால் சாயல்குடி அருகே தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வானம் பார்த்த பூமி

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்றுதான் இன்று வரை சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு இங்கு மழை என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் மட்டும்தான் இந்த மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்யும். பருவமழை சீசனை எதிர்பார்த்தே மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது போல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. இதையொட்டி சாயல்குடி அருகே உள்ள சிக்கல், இதன்பாடல், ஆயக்குடி, கொத்தங்குளம், கடலாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் விவசாயிகள் நெல் விவசாய பணிகளை தீவிரமாக தொடங்கி ஈடுபட்டு வந்தனர்.

பருவமழை சீசன் தொடங்கி 2 மாதங்கள் முடிந்த பின்னரும் சிக்கல், ஏர்வாடி, இதம்பாடல், ஆயக்குடி, கொத்தங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் இந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்யவில்லை. இதனால் தற்போது நெற்பயிர்கள் வளர்வதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களிலும் காய்ந்த நிலையில் காட்சியளித்து வருகின்றன.

கருகி வரும் பயிர்கள்

இதுகுறித்து ஆயக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியசாமி கூறியதாவது:- இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை ஓரளவு மழை பெய்தது. சீசன் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ய தொடங்கி உள்ளதால் சீசன் தொடங்கிய பின்னர் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை இருக்கும் என்று எதிர்பார்ப்பில் நெல் விவசாயத்தை தொடங்கினோம்.

ஆனால் தற்போது நெற்பயிர்கள் ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே மழையே பெய்யவில்லை. இதனால் போதுமான தண்ணீர் இல்லாமலும், மழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. சுமார் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு சிக்கல், ஆயக்குடி, கொத்தங்குளம், சாயல்குடி சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலும், அதிக அளவு மழை பெய்ததால் விவசாயிகள் எதிர்பார்த்ததை விட நெல் விளைச்சலும் அதிகமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com