திமுக ஆட்சியில் ரத்த ஆறு ஓடுகிறது; எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

நாங்குநேரியில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
திமுக ஆட்சியில் ரத்த ஆறு ஓடுகிறது; எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
Published on

சென்னை,

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், 9 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்து பெட்ரோல் குண்டு நடத்திய கண்மூடித்தனமானக் கொடூரத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் காட்சிகள் காணவே பதைக்கின்றன.

"சட்டம் ஒழுங்கு" என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை மெத்தனப்போக்காக

கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது.

திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல கலர் கலராக ரீல் விளம்பரங்களை மட்டும் செய்கிறது

இந்த மு.க.ஸ்டாலின் அரசு. ஆனால், திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது !

இப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர்.

இந்த அச்சமும், பதற்றமும் தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்?

சமூக மோதல்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com