

ராமேசுவரம்,
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நேற்று காலை 650-க்கும் அதிகமான விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதற்கிடையே கடந்த வாரம் மன்னார் வளைகுடா பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். பின்னர் நிலமை சீரானதைத் தொடர்ந்து அவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அலுவலகம் டோக்கன் வழங்கியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதையடுத்து பெரும்பாலான படகுகள் அதிக அளவில் அலைக்கழிக்கப்பட்டதால் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி கொண்டு அங்கிருந்து புறப்பட்டன.
அப்போது வாசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மட்டும் அந்த பலத்த சூறாவளி காற்றில் சிக்கி அங்குமிங்கும் தள்ளாடியது. ஒரு கட்டத்திற்கு மேல் படகின் கீழ் பகுதியில் பலகை உடைந்து பெரிய ஓட்டை விழுந்து படகு சிறிது சிறிதாக மூழ்க தொடங்கியது. அதிலிருந்த மீனவர்கள் படகை காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
ஆனால் படகு தொடர்ந்து மூழ்கியதால் உயிர் பிழைக்க அதிலிருந்த மீனவர்களான அந்தோணிசாமி (வயது 50). கிஷோக் (48), பாபு (46), உச்சிப்புளியை சேர்ந்த யூசப் (50), தீன் (60), புதுமடம் சேக் (30), செல்வா (48), ராமேசுவரம் அரியாங்குண்டு பகுதியை சேர்ந்த சதீஷ் (45) ஆகிய 8 பேர் கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த சற்று தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமான படகு விரைந்து சென்று கடலில் குதித்த 8 மீனவர்களையும் அவர்களது படகில் ஏற்றிக் கொண்டு பத்திரமாக கரையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். நடுக்கடலில் மூழ்கிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். விசைப்படகு மூழ்கி மீனவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.