ஆந்திரா: கடலில் மூழ்கிய படகு..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 தமிழக மீனவர்கள்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
படகு மூழ்கியதில் அதிஷ்டவசமாக 8 மீனவர்களும் உயிர் தப்பினர்.
படகு மூழ்கியது
Published on

ஆந்திர நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகு மூழ்கி நிலையில், 8 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

படகில் இயந்திரக் கோளாறு

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காசிமேடு பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென்று பழுது ஏற்பட்டது.

மூழ்கிய படகு

இயந்திர கோளாறு காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, கடலில் மெல்ல மூழ்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சற்றும் எதிர்பாராத விதமாக படகு கடலுக்குள் முழுமையாக மூழ்கியது.

துரிதமாகச் செயல்பட்ட சக மீனவர்கள்

அதே கடற்பகுதியில் அவர்களுக்கு அருகே மற்றுமொரு விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஆபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும் அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் சென்னை காசிமேடு கடற்கரைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இந்த விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து கடலோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய சம்பவமும், மீனவர்கள் நூலிழப்பில் உயிர் தப்பியதும் சென்னை கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com