

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில், சென்டிரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்துக்கு மின்சார ரெயில்கள் செல்லும் 4-வது நடைமேடையில் இருந்து பெரம்பூர் ஜமாலியாவுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டு அருகே நீலநிற டிராலி சூட்கேஸ் ஒன்று நிமிர்த்து வைக்கப்பட்டு இருந்தது. ரெயில் பயணிகளுக்கு இடையூறாக, நீண்டநேரம் கேட்பாரற்ற நிலையில் இருந்த அந்த சூட்கேஸ் பற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் யாராவது, அவசரமாக ரெயிலில் ஏறும்போது அந்த சூட்கேசை தவறவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதி, அதை ஓரமாக எடுத்து வைக்க முயன்றனர்.
ஆனால் அந்த சூட்கேஸ், வழக்கத்துக்கு மாறாக அதிக பாரமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல், சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி, அந்த சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கை மற்றும் கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரத்தம் உறைந்தும், உடல் சற்று அழுகிய நிலையிலும் காணப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, ரெயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
ரெயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் 'ஜான்சி' வரவழைக்கப்பட்டது. அது சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ரெயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரெயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தலை, கை, கால்கள் இல்லாமல் மீட்கப்பட்ட வாலிபர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர், தலை, கை,கால்கள் இல்லாத முண்டத்தை சூட்கேசில் அடைத்து எடுத்து வந்து, பெரம்பூர் ரெயில் நிலைய 4-வது நடைமேடை பகுதியில் வைத்துவிட்டு, மீண்டும் அதே ஆட்டோவில் தப்பிச்சென்று இருப்பது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து தீவிர விசாரணையை போலீஸ் நடத்தியதில் கொலையாளிகள் சிக்கினர்.
கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அந்த நபரின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.