பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் வாலிபர் உடல்: 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

தலை, கை, கால்களை துண்டித்த நிலையில் வாலிபர் உடலை சூட்கேசில் அடைத்து வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் வாலிபர் உடல்: 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை
Published on

சென்னை,

கேட்பாரற்ற கிடந்த சூட்கேஸ்

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில், சென்டிரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்துக்கு மின்சார ரெயில்கள் செல்லும் 4-வது நடைமேடையில் இருந்து பெரம்பூர் ஜமாலியாவுக்கு இறங்கி செல்லும் படிக்கட்டு அருகே நீலநிற டிராலி சூட் கேஸ் ஒன்று நிமிர்த்து வைக்கப்பட்டு இருந்தது.

ரெயில் பயணிகளுக்கு இடையூறாக, நீண்டநேரம் கேட்பாரற்ற நிலையில் இருந்த அந்த சூட்கேஸ் பற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் யாராவது. அவசரமாக ரெயிலில் ஏறும்போது அந்த சூட்கேசை தவறவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதி, அதை ஓரமாக எடுத்து வைக்க முயன்றனர்.

சூட்கேசில் வாலிபர் உடல்

ஆனால் அந்த சூட்கேஸ், வழக்கத்துக்கு மாறாக அதிக பாரமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல், சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி, அந்த சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

கை மற்றும் கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரத்தம் உறைந்தும், உடல் சற்று அழுகிய நிலையிலும் காணப்பட்டது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. கொலையானவருக்கு சுமார் 30 வயது இருக்கலாம். ஆனால் கொலையானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணை

அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர், தலை, கை, கால்கள் இல்லாத முண்டத்தை சூட்கேசில் அடைத்து எடுத்து வந்து, பெரம்பூர் ரெயில் நிலைய 4-வது நடைமேடை பகுதியில் வைத்துவிட்டு, மீண்டும் அதே ஆட்டோவில் தப்பிச்சென்று இருப்பது தெரியவந்தது. துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்களை தனித்தனியாக மூட்டை கட்டி வெவ்வேறு இடங் களில் வீசி இருக்கலாம் எனவும், அதனை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் சிக்கினால்தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

4 தனிப்படைகள்

இந்நிலையில் பெரம்பூர் சூட்கேஸ் கொலை வழக்கில் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் 2 தனிப்படைகள் மற்றும் பெரம்பூர் ரெயில்வே DSP தலைமையில் 2 தனிப்படைகள் என மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. சந்தேக மரணம் பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com