காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட பெண் நர்சின் சடலம்: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

மர்மநபர்கள் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றிருப்பது தெரியவந்தது.
காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட பெண் நர்சின் சடலம்: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
Published on: 

திருப்பூர்,

ஊத்துக்குளி அருகே, நர்சை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நர்ஸ்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி. அவருடைய உறவினர் மகள் உத்திரா (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அதன்பின்னர், தம்பதியினர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்கு சென்றார். உத்திரா அதே பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று காலை வழக்கம் போல் ரஞ்சித்குமார் உத்திராவை மருத்துவமனையில் விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அன்று இரவு மனைவியை அழைத்து செல்வதற்காக மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது மருத்துவமனையில் வேலை பார்த்த ஊழியர்கள் “உங்கள் மனைவி ஏற்கனவே வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டதாக" தெரிவித்தனர். இதையடுத்து ரஞ்சித்குமார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் உத்திரா இல்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் மனைவியை தேடினார். இருப்பினும் மனைவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நிர்வாணமாக அழுகிய நிலையில்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காட்டுக்குள் உள்ள முட்புதருக்குள் நர்சு உத்திராவின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ரஞ்சித் குமார், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது துக்கம் தாங்காமல் அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் ரஞ்சித் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உத்திராவை, மர்மநபர்கள் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com