ஏற்காட்டில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கண்டெடுப்பு - தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

தேயிலை தோட்டங்களில் தங்கி பணி புரியும் வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காட்டில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கண்டெடுப்பு - தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த குப்பனூர் மலைப்பகுதியில் இருக்கும் வலுக்குப்பாறை என்ற இடத்தின் அருகே பள்ளத்தில் சுமார் 10-13 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கிடப்பதாக கடந்த வியாழக்கிழமை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தனிப்படை

இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனைச்சாவடிகளில் விசாரணை

மேலும் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்காடு அடிவாரப் பகுதியில் இருக்கும் சோதனைச்சாவடி மற்றும் குப்பனூர் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில், ஏற்காடு மலை பகுதியில் இருந்து இறங்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் சுற்றலா பயணிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை

அதோடு ஏற்காடு மலைப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் தங்கி பணி புரியும் வடமாநில தொழிலாளர்களிடமும் தனிப்படை காவல்துறையினர் நேரடியாக சென்று அவர்களிடம் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் அடையாளத்தை கண்டறியும் விதமாக காவல்துறையினர் உயிரிழந்த சிறுமி அணிந்திருந்த உடை மற்றும் ஸ்வெட்டர் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் இருந்து அவை விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி சந்தேகத்திற்குரிய நபர்களை தேடி வருகின்றனர்.

X