

பெரம்பலூர்,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட் டர் தொலைவில் துபாரே வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 32 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமையொட்டி காவிரி ஆறு பாய்ந்தோடி வருகிறது. இந்த காவிரி ஆற்றில் கும்கி யானைகள் தினமும் குளிப்பாட் டப்பட்டு வருகிறது. கும்கி யானைகளை பொதுமக்களும் பாகன்களின் மேற்பார்வையில் குளிப்பாட்டலாம். இதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் குளிப்பாட்ட ஒவ்வொரு கும்கி யானைகளையும் பாகன்கள் அழைத்து வந்து, ஆற்று நீருக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் 'கஞ்சன்' என்ற ஆண் யானை திடீரென ஆக்ரோஷமடைந்து, 'மார்த்தண்டா' (வயது 34) என்ற யானையை கொடூரமாக தாக்கியது. பாகன்கள் கட்டுப்படுத்த முயன்றும், மதம் பிடித்தது போல் காட்சியளித்த கஞ்சன் யானை, மார்த்தண்டாவை தனது தந்தங்களால் முட்டி தள்ளியது.
இதில் நிலைகுலைந்து மார்த்தண்டா யானை ஆற்றுக்குள் விழுந்தது. மார்த்தண்டா யானை அருகில் நின்று சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜூன்ஸி (33) என்பவர் தனது கணவர் ஜோயல், குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் மீது மார்த்தண்டா யானை விழுந்தது. அந்த யானையின் அடியில் சிக்கிய ஜூன்ஸியின் தலை ஆற்றில் கிடந்த பாறையில் மோதியது. இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
யானையின் அடியில் சிக்கிய ஜூன்ஸியை அவரது கணவர் போராடி மீட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜூன்ஸி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை பறி கொடுத்த ஜோயல் கண்ணீர்விட்டு கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
ஜூன்ஸியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவே கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பெரம்பலூருக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறுதிச் சடங்கிற்கு பிறகு அவரது உடல் ஆலம்பாடி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.