

சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மீனா (வயது 29). இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வது பிரசவத்துக்காக எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் மீனா அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் மீனாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது ரத்தம் தேவைப்படுவதால், அவரது ரத்த வகையை பரிசோதனை செய்து, கொடையாளர்களை ஏற்பாடு செய்யும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
மீனாவின் ரத்த வகை பாம்பே எனப்படும் அரிய வகை ரத்தம் என்பதால், கொடையாளர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே மீனாவின் 2-வது பிரசவத்துக்கு ரத்த தானம் வழங்கிய, பாம்பே ரத்த வகை உடைய பெங்களூருவைச் சேர்ந்த ஆதித்யா என்பவரை டாக்டர்கள் தொடர்பு கொண்டனர். கொரோனா காலம் என்பதால், அவரால் சென்னை வர முடியவில்லை. இதனால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரியில் ஆதித்யா ரத்த தானம் செய்தார்.
பின்னர் அவர் தானமாக கொடுத்த ரத்தம் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பத்திரமாக சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மீனாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையை மீனா பெற்றெடுத்தார். பாம்பே ரத்த வகை கொண்ட ஆதித்யா, இதுவரை 55 முறை ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.