பத்திரப்பதிவினால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரிப்பு அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

பத்திரப்பதிவினால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
பத்திரப்பதிவினால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரிப்பு அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
Published on

சென்னை,

தமிழக அரசின் முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2011-12-ம் ஆண்டில் 35.18 லட்சம் ஆவணங்கள் பதிவாகின. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் 26.90 லட்சம் (2012-13), 26.53 லட்சம் (2013-14), 25.73 லட்சம் (2014-15), 25.28 லட்சம் (2015-16), 20.27 லட்சம் (2016-17), 22.10 லட்சம் (2017-18), 25.73 லட்சம் (2018-19) ஆவணங்கள் பதிவாகின.

இதன் மூலம் அந்த ஆண்டுகளில் அரசுக்கு முறையே ரூ.6,619 கோடி (2011-12), ரூ.7,455 கோடி, ரூ.8,055 கோடி, ரூ.8,279 கோடி, ரூ.8,562 கோடி, ரூ.7,007 கோடி (2016-17), ரூ.9,121 கோடி, ரூ.11 ஆயிரத்து 71 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பான மானியக் கோரிக்கையில் பங்கேற்று பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சேகரன் (போளூர்), ஆவணப்பதிவின் மூலம் அரசுக்கு வரும் வருவாய் போதிய அளவில் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, அதிகாரிகள் பயமுறுத்தினால்கூட, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை குறைத்ததால்தான் பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்று கூறி 33 சதவீதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறைத்து உத்தரவிட்டார். அதன் பிறகுதான் பத்திரப்பதிவு மற்றும் அதன் மூலம் வருவாய் உயர்ந்தது என்று கூறினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. சேகரன்:- திட்டப்பணிகளில் பொருள் கொள்முதலில் ஒருமுறை ஜி.எஸ்.டி. வரியும், அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருளுக்கு மற்றொரு முறை ஜி.எஸ்.டி. வரியும் வாங்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், அந்த நிலையை மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com