ஒரே நாளில் ரூ.11¾ லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ஒரே நாளில் ரூ.11 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தொவித்தார்
ஒரே நாளில் ரூ.11¾ லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
Published on

கள்ளக்குறிச்சி

புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் உள்ள சென்னை பைபாஸ் திடலில் மாவட்ட நூலகத் துறை சார்பில் கல்லை புத்தகத்திருவிழா என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கண்காட்சியின் 5-வது நாளான நேற்று காலை 10.30 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பானை ஓவியப்போட்டி, அதைத்தொடாந்து மதியம் 2.30 மணிக்கு பேச்சு அரங்கம், மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் மண்டல கலைப்பண்பாடு மையம் சார்பில் கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், மாடாட்டம் ஆகிய பல்துறை கலை நிகழ்ச்சி, இரவு 7 மணியளவில் பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மாணவர்களுக்கு பரிசு

முன்னதாக பானை ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடர்ந்து கண்காட்சி அரங்குகள் மற்றும் பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2,825 பெண்களுக்கு பரிசோதனை

இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் நேற்று வரை 2 ஆயிரத்து 825 பெண்களுக்கு புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தம், சர்க்கரை என பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்களுக்கு மேல்சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புத்தகத் கண்காட்சியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.11 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். மேலும் தினந்தோறும் குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும புத்தகக் கண்காட்சியில் அதிக அளவில் புத்தகங்களை வாங்கி குலுக்கல் முறையில் பரிசுகளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com