எல்நினோவால் சாதகம்: தூத்துக்குடியில் 80 சதவீதத்தை எட்டிய உப்பு உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
எல்நினோவால் சாதகம்: தூத்துக்குடியில் 80 சதவீதத்தை எட்டிய உப்பு உற்பத்தி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் எல்நினோவால் சாதகமான சூழல் உருவானதால், 80 சதவீதம் உப்பு உற்பத்தியாகி உள்ளது. அதேசமயம் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

சாதகமான சூழல்

நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தியாகி வந்தது. தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி வேகம் எடுத்து உள்ளது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து உப்பு உற்பத்தியை பாதிக்கும். இதனால் உப்பு விலை ஓரளவு உயர்ந்து இருக்கும்.

இந்த ஆண்டு 'எல்நினோ' போன்ற இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வீசும் மேல்காற்றும், கொளுத்தும் வெயிலும் சேர்ந்து இருந் தால் 'கோடை' என்று உப்பு உற்பத்தியாளர்கள் அழைப்பார்கள். அந்த கோடை இந்த ஆண்டு சிறப்பாக அமைந்து இருப்பதால் உப்பு உற்பத்தியை அதிகரித்து உள்ளது. இதனால் இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உப்பளங்களில் எங்கு பார்த்தாலும் உப்புக்குவியல்கள் வெள்ளை நிற குன்றுகள் போன்று காட்சி அளிக்கின்றன.

விலை சரிவு

அதே நேரத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் கலக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடியில் தற்போது தரமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதல் தர உப்பு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையும், 2-வது தர உப்பு ரூ.800 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனாலும் கேரளம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு குஜராத் உப்பு அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் தூத்துக்குடி உப்பு மார்க்கெட்டை இழந்து உள்ளது. இதனால் உப்பு விற்பனையும் மந்தமாக உள்ளது. இது உப்பளத் தொழிலை தொடர்ந்து நலிவடைய செய்வதாக உள்ளது.

உற்பத்தியாளர் கவலை

இது குறித்து உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. அதாவது 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியாகி உள்ளது. உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு 100 சதவீதம் உப்பு உற்பத்தியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் விற்பனைக்கான வாய்ப்புகளும் குறைந்து உள்ளன. தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உப்பு மார்க்கெட்டை தூத்துக்குடி வியாபாரிகள் இழந்து உள்ளனர். அங்கு குஜராத்தில் இருந்து நேரடியாக உப்பு விற்பனைக்கு வருகிறது.

இதனால் உப்பு விலை மிகவும் குறைந்து உள் ளது. இதே நிலை நீடித்தால் உப்புத் தொழில் மிகவும் நலிவடைந்துவிடும். ஆகையால் அரசு உப்புத் தொழிலை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com