

சென்னை,
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்க ளிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் உரு வாக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 756 வாக்காளர்கள் என்ற விகிதாசாரம் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பி.எல்.ஓ.' அலுவலர் என்ற வகையில் 75 ஆயிரத்து 64 பேர் பணியில் உள்ளனர்.
தற்போது வாக்காளர்களுக்கு அடையாள சீட்டுகளை (பூத் சிலிப்) வழங்க பி.எல்.ஓ. அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தேர்தலுக்காக புதிய வகை அடையாளச் சீட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன. அதில் அவர்களின் பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண்ணை எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த 'பூத் சிலிப்'பில் 'கியூ ஆர் கோடு'ம் உள்ளது. இதன் மூலம் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
இந்த 'பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடுவீடாக சென்று இவற்றை வழங்கி வருகிறார்கள். வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் 'பூத் சிலிப்புகளை பி.எல்.ஓ. அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.