

சென்னை,
தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
தேர்தல் பணிகளை ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளும் வேகப்படுத்தி உள்ளனர். வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கூடுதலாக மின்னணு வாக்கு எந்திரங்கள் தேவைப்பட்டது.
தமிழகம் முழுவதும் 4023 பேர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் எண்ணிக்கை அதிகமானதால் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை தெரிவு செய்து அனுப்பும் பணி இன்று தொடங்கியுள்ளது.
அதேபோல வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. வாக்காளர் தகவல் சீட்டு கியூ.ஆர்.கோடு உடன் அச்சடிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பெயர், வரிசை எண் மற்றும் பாகம் எண் பெரிதாக அச்சிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு எளிதாக சென்று வாக்களிக்கும்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் தகவல் சீட்டு சீட்டு வினியோகிக்கும் பணி நாளை தொடங்கி 17ந் தேதிக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களை ஓட்டு போடுவதற்கு பயன்படுத்தலாம்.
பூத் சிலிப் வழங்கும் பணி வீடு வீடாக தொடங்கப்படுகின்ற நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தால் 2 முறை வாக்குச் சாவடி அலுவலர் வீட்டிற்கு வருவார். அப்பொழுதும் யாரும் இல்லை என்றால் அருகிலுள்ள வீடுகளில் தகவல் தெரி வித்துவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்.
குடும்பத்தில் உள்ள தலைவரோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பூத் சிலிப்பை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பூத் சிலிப் மொத்தமாக சென்னையில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் இந்தத் தேர்தலில் ஒரே இடத்தில் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் பூத் சிலிப் வினிநியோகிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 28 லட்சம் வாக்காளர்களில் உள்ளனர். 4,085 வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தேர்தல் பணி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்களே இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.