உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுவன் அடித்துக்கொலை: தாய், கள்ளக்காதலனுக்கு தண்டனை உறுதி

உல்லாசத்துக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதல் ஜோடி கருதினர்.
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுவன் அடித்துக்கொலை: தாய், கள்ளக்காதலனுக்கு தண்டனை உறுதி
Published on

கோவை,

கள்ளக்காதல்

கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது32). இவருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயது மகளும் இருந்தனர். திவ்யா ஒரு அட்டைபெட்டி கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். திவ்யா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜதுரை (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ராஜதுரை, அடிக்கடி திவ்யாவின் வீட்டுக்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். அதற்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக அவர்கள் கருதினர். எனவே 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினர்.

சிறுவன் கொலை

இதில் சிறுவன் அபிஷேக்கை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். பள்ளிக்கு வந்து தனது தந்தை பார்த்தபோது. தாயும், வீட்டுக்கு வரும் நபரும் அடித்து கொடுமைப்படுத்துவதால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறி சிறுவன் கதறி அழுதுள்ளான். அப்போது சிறுவனின் தந்தை புதிதாக கட்டும் வீட்டு பணிகள் முடிந்ததும் மகனையும், மகளையும் அழைத்து செல்வதாக ஆறுதல் கூறி உள்ளார்.

கடந்த 19.4.2020 அன்று சிறுவனை அங்குள்ள ஒரு கடை அருகில் வைத்து ராஜதுரையும், திவ்யாவும் குச்சியால் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டித்து உள்ளனர். இந்தநிலையில் மயங்கி விழுந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

22-ந்தேதி தீர்ப்பு

இது குறித்து சாய்பாபாகாலனி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து திவ்யா, கள்ளக்காதலன் ராஜதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட திவ்யாவுக்கும், ராஜதுரைக்கும் தண்டனை வழங்குவதை நீதிபதி உறுதி செய்தார். அந்த தண்டனை விவரம் வருகிற 22-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com