கூமாபட்டியில் சோகம்... கீழே கிடந்த பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் உயிரிழப்பு

கீழே கிடந்த பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் உயிரிழந்தான்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமிபுரம் இமானுவேல் முடங்கி தெருவை சேர்ந்தவர் வீரச்சாமி (வயது 40). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (36). இவர்கள் இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுடைய மகன் கோடீசுவரன் (5). எல்.கே.ஜி. படித்து வந்தான்.
இவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் அடைந்தான். உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டின் அருகே விளையாடியபோது கீழே கிடந்த ஒரு பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை கோடீசுவரன் குடித்ததாகவும், அதன்பின்னரே சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






