போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த வாலிபர், பெண் கைது

சுரண்டை அருகே, போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே, போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புகார்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர் கடந்த மாதம் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு அனுப்பிய புகார் மனுவில், வீரகேரளம்புதூர் பகுதியில் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்பட்டு போலி பிறப்பு சான்று தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

போலி பிறப்பு சான்றிதழ்

இதில், வீரகேரளம்புதூர் அருகே ராஜகோபாலபேரி கிராமம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கருணாநிதி மகன் கதிரேசன் (வயது 32), சுரண்டை அருகே கூழிபொத்தை அருணாசலபுரத்தை சேர்ந்த ஜானகி (49) ஆகியோர் சேர்ந்து பலருக்கு போலி பிறப்பு சான்றிதழ் தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தமிழ்நாடு அளவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்கள் இவர்களை தொடர்பு கொண்டு போலி பிறப்பு சான்றிதழ்கள் பெற்றதும், அதில் அரசு முத்திரை போல் தயாரித்து போலியாக முத்திரை பதித்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சுரண்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக தயார் செய்யப்பட்ட போலி சான்றிதழை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். அந்த சான்றிதழில், வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தின் `சீல்' போல் போலியாக வைக்கப்பட்டு கையெழுத்து போடப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது. சுரண்டையில் பிறந்த குழந்தைக்கு சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே பிறப்பு சான்று பெற முடியும் என்று இருக்கும் நிலையில், தாலுகா அலுவலகம் சார்பில் பிறப்பு சான்று அளிக்கப்பட்டதாக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2 பேரும் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மற்றொரு பெண்

இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் பூந்துறை ரோட்டை சேர்ந்த கவிதா (39) என்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாநில அளவில் இந்த முறைகேடு நடந்துள்ளதா? என்ற கோணத்தில் வீரகேரளம்புதூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com