

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு வாகனம் திருடுபோன சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். இந்த சம்பவத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
திருச்செந்தூரைச் சேர்ந்த முத்து (24) என்பவர், தனக்குச் சொந்தமான Tata Ace மினி சரக்கு வாகனத்தை 02.05.2026 நள்ளிரவு அரசு மருத்துவமனை அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து சோதனைச் சாவடிகளும் மற்றும் ரோந்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார் தலைமையில், ஆழ்வார்திருநகரி காவல் உதவி ஆய்வாளர் லதா உள்ளிட்ட போலீசார் சமத்துவபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த Tata Ace வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டதில், அது திருச்செந்தூரில் திருடுபோன வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்தது திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த சிறுவனை கையகப்படுத்தி, வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே வாகனத்தை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் நேரில் அழைத்து பாராட்டினார்.