மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாவு மில் உரிமையாளர் ஒருவர், தனது மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் சாலையை மறித்தபடி நின்றனர்.
மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 60) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். கடந்த 2.6.2024 அன்று அவர் ஆசாரிமார் தெரு வழியாகத் தனது மில்லுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் சாலையை மறித்தபடி நின்றுள்ளனர்.

இதனை முத்துராமலிங்கம் தட்டிக்கேட்டு அவர்களைச் சத்தமிட்டுவிட்டு மில்லுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பட்டு மகன் பாலசுப்பிரமணியன், பரிசுத்தமணி மகன் இம்மானுவேல் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்றது. இளஞ்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் எஸ்.பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட சிறுவன், பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com