என்ஜினீயர் வீட்டில் புகுந்து 60 பவுன் நகை கொள்ளை

சுரண்டை அருகே என்ஜினீயர் வீட்டில் கதவை உடைத்து 60 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
என்ஜினீயர் வீட்டில் புகுந்து 60 பவுன் நகை கொள்ளை
Published on

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூர் கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் திருமலைநாதன் (வயது 39). இவரது மனைவி மலர்விழி (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

என்ஜினீயரான திருமலைநாதன் தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வருகிறார். இதனால் வீட்டில் மலர்விழி தனது குழந்தைகள் மற்றும் பாட்டி மாரியம்மாள் (80) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.

கோவில் திருவிழாவுக்கு சென்றனர்

சின்னத்தம்பிநாடாரூரில் தற்போது கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 3-ந் தேதி இரவில் சாம பூஜையில் கலந்து கொள்வதற்காக மலர்விழி தனது குழந்தைகள், பாட்டியை அழைத்துக் கொண்டு சென்றார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள அறைகளில் மின்விளக்கு எரிவதை கண்டு திடுக்கிட்டார்.

60 பவுன் நகைகள் கொள்ளை

உடனடியாக வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு அறைகளின் கதவுகளும் கடப்பாரை கம்பியால் உடைந்து கிடந்தது.

மேலும் 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், மோதிரம், தாலி சரடு என சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, கொலுசுகள், ரூ.25 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உடனடியாக மலர்விழி திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசுக்கும், சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததை மர்மநபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தனிப்படை

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து வீட்டிற்கு பின்னால் சிறிது தூரம் வரை ஓடி சென்று திரும்பி வந்தது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சுரண்டை அருகே என்ஜினீயர் வீட்டில் கதவை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com