

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர், தனது தந்தை பெயரில் உள்ள சொத்து வரியை தனது பெயரில் மாற்றுவதற்கு பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது சொத்து வரி பெயரை மாற்றுவதற்கு ஊராட்சி செயலர் முருகேசன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு ராஜா, தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும் பேரம் பேசி ரூ.4 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி செயலர் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, விவசாயி ராஜாவிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கி, அதனை ஊராட்சி செயலரிடம் கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். போலீசார் கூறியபடி நேற்று முன்தினம் பூம்பாறை ஊராட்சி அலுவலகத்துக்கு ராஜா சென்றார். முன்னதாக அந்த அலுவலகத்துக்கு வெளியே லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.
இதற்கிடையே ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் தற்காலிக கணினி ஆபரேட்டர் ராஜா சண்முகம் ஆகியோரிடம் ராஜா ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய முருகேசன் மற்றும் ராஜா சண்முகத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.