

செங்குன்றம்,
சென்னையை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் மிகின்அபுபக்கர்(வயது 42). போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள இவரை, பூந்தமல்லி கிளை சிறைக்கு மாற்றாமல் இருக்க புழல் சிறை அதிகாரி ஒருவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மிகின்அபுபக்கரின் உறவினரான லியோ என்பவர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடந்த மார்ச் மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லியோவிடம் கொடுத்து சிறை அதிகாரியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அப்போது அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிய சிறை காவலர் பிச்சையாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சிறை அதிகாரி அறிவுறுத்தலின்பேரிலேயே தான் லஞ்சம் வாங்கியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கைதான பிச்சையாவை அதே புழல் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் புழல் சிறை காவலர்களான சேகர், வேலுசாமி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் மார்ச் மாதமே லியோவிடம் இருந்து தலா ரூ.10 ஆயிரம் பெற்று உள்ளனர்.
ஆனால் அதற்கான ஆதாரம் இல்லாததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்து இருந்தனர். இதற்கிடையில் லியோ லஞ்சம் கொடுக்கும்போது, அவருடன் வந்த நபர் எடுத்த வீடியோ ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்தனர்.
அந்த வீடியோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆராய்ந்த போது, சிறை காவலர்கள் சேகர், வேலுசாமி இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானது. மேலும் அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து அந்த வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு சிறை காவலர்கள் வேலுசாமி, சேகர் இருவரும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிறைத்துறை தலைவர் உத்தரவின் பேரில் சென்னை தலைமையிடத்து டி.ஐ.ஜி.முருகேசன் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விவகாரத்தில் சிறை காவலர்கள் வேலுசாமி, சேகர் இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும், மேலும் சில சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்கள், காவலர்களும் விரைவில் சிக்குவார்கள் என்றும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.