கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் கொத்தனார் தற்கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
குமரி,
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 47). இவர் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). இவர்களுக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியின் விருப்பத்தின் பேரில் கொன்னக்குழிவிளையில் இருந்த குடும்ப வீட்டை விற்று விட்டு தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். இந்தநிலையில் சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டில் இருந்த பெஞ்சமின் தட்டிக்கேட்டதால் அவருக்கும், மனைவி சுனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இதனை அறிந்த பெஞ்சமினும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர், மனைவி சுனிதா மாயமானது குறித்து இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் தெற்கு மணக்காவிளையில் உள்ள வீட்டில் பெஞ்சமின் விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தற்கொலைக்கு முன்பு பெஞ்சமின் தனது முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டது தெரியவந்தது. அதில் அவர் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
போலீஸ் சூப்பிரண்டு அய்யா, 19 வருடம் என் மனைவியை ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் கள்ளக்காதலனுடன் சென்று விட்டார். கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். எனது மனைவி உறவினர், வக்கீல் ஒருவரும் என்னை மிரட்டினர். (இவ்வாறு பேசும் போது அம்மா, அம்மா என கதறி அழுகிறார்.) என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அதை நான் மேலே இருந்து பார்ப்பேன். என்னை கொஞ்சம், கொஞ்சமாக மனைவியின் கள்ளக்காதலன் கொன்றிருக்கிறான், போலீஸ் சூப்பிரண்டு அய்யா, அவனை விட்டு விடாதீங்க. வியாகுல மாதா அன்னையாக உங்களை கருதுகிறேன். நடவடிக்கை எடுங்கள். (அப்போது நெஞ்சில் அடித்தபடி கதறி அழுகிறார்).
இந்த வீடியோ 13 நிமிடம் ஓடுகிறது. தற்போது அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தான் வீடியோ வெளியிட்டு பெஞ்சமின் தற்கொலை செய்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. மேலும் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெஞ்சமின் உறவினர்கள் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






