

நெல்லை,
பாளையங்கோட்டையில் திருமணமான மறுநாளே குறைபிரசவத்தில் புதுப்பெண் குழந்தை பெற்றார். அவர் கர்ப்பத்தை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் வாலிபருக்கும், தாழையூத்து அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 15-ந்தேதி திருமணம் நடந்தது. அன்று இரவு கணவரின் வீட்டுக்கு புதுப்பெண் வந்தார். பின்னர் முதலிரவு முடிந்த நிலையில், மறுநாள் காலையில் புதுப்பெண்ணுக்கு அதிக வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்பட்டது. எனவே அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே புதுமாப்பிள்ளையின் வீட்டு வாசலில் 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே புதுமாப்பிள்ளை பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் மனு அளித்தார். அதில், நான் திருமணம் செய்த இளம்பெண் 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதனை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுப்பெண் மீது நம்பிக்கை மோசடி, கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.