

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்தரிக்காய் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் 50 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்த சாதகமான மழை மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக, இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தது. இங்கு விளையும் கத்தரிக்காய்களை வேலூர், ஆற்காடு உள்ளிட்ட பல் வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களாக கத்தரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட் டுமே விற்பனையாகி வந்தது. இதனால் சாகுபடி செலவுடன் ஒப்பிடும் போது விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் காய்கறிகளை அதிகளவில் வாங்குவதால் காய்கறிகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. நேற்று காவேரிப்பட்டணம் தினசரி காய்கறி சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து அதிகமாக காணப்பட்டது. ஆனாலும், தரம் வாய்ந்த கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய் வரை தாராளமாக விற்பனையானது.
பொதுவாக விளைச்சல் அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சியடைவது வழக்கம். ஆனால், தற்போது நல்ல விலையும் கிடைத்து, விளைச்சலும் அதிகரித்துள்ளதால் தங்களுக்கு போதிய லாபம் கிடைப்பதாக இப்பகுதி காய்கறி விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.