இயந்திரக் கோளாறு: அவசர அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை,
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது.
உடனே விமானி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து புறப்பட்ட 37 நிமிடத்தில் அந்த விமானம் உடனடியாக திரும்பிச் சென்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் லண்டன் - சென்னை, சென்னை - லண்டன் செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ரத்தால் இரு மார்க்கத்திலும் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக, விமானங்களின் இயந்திரங்கள் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று முறை சரிபார்க்கப்படுகிறது. விமான இயந்திரங்களில் சிறிய அளவில் பாதிப்புகள் இருந்தாலும், அதை முழுமையாக சரி செய்த பின்பே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தான் விமானங்கள் தாமதமாவது, இல்லையேல் ரத்து செய்யப்படுவது போன்றவைகள் நடக்கின்றன
பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பயணிகள் தங்களுக்கு ஏற்படும், இதைப் போன்ற பிரச்சினைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். விமான நிறுவனங்களுக்கு பயணிகளின் உயிர் முக்கியம் என்று கூறினர்.