2 வயது குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொன்ற கொடூர தந்தை.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்

2 வயது பெண் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் (வயது 25). இவரது மனைவி வனிதா (24). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது.
கப்பலூர் சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாண்டி செல்வம் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக வனிதா, கணவரை பிரிந்து கப்பலூரில் தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை அவருடன் இருந்து வந்தநிலையில் பாண்டி செல்வம் வேலைக்கு வரும்போது குழந்தையை பார்த்துச்சென்றார்.
3 நாட்களுக்கு முன்பு காலையில் குழந்தையை அழைத்துக்கொண்டு பாண்டி செல்வம் சென்றார். தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த குழந்தை பார்கவி அழுதது.
குடும்ப தகராறில் ஆத்திரத்தில் இருந்த பாண்டி செல்வம், அழுத குழந்தையை அடித்து அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை பார்கவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது. உடனே பாண்டி செல்வம், குழந்தையின் உடலை சாக்கு மூட்டையில் கட்டினார். பின்னர் ஆலையில் உள்ள ஒரு எந்திரத்தின் அடியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாததுபோல் பாண்டிச்செல்வம், திருமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று குழந்தையை காணவில்லை என புகார் அளித்தார்.
இந்த நிலையில் அந்த ஆலையில் பணியாற்றும் ஒருவர் நேற்று எந்திரத்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சோதனை செய்தபோது எந்திரத்தின் ஒரு பகுதியில் ரசாயன மூட்டைக்குள் குழந்தையில் உடல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
இதுகுறித்து பாண்டி செல்வத்திடம் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர் குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாண்டி செல்வத்தை கைது செய்தனர்.






