

காஞ்சீபுரம்,
மாங்காடு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதை பழக்கத்திற்கு அடிமையான 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவாவின் மகன் நிசாந்த் (வயது 23) என்பவர். கடந்த 4 மாதங்களாக இங்கு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் ஏற்கெனவே இங்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து, அங் கேயே ஊழியர்களாக வேலை பார்த்து வந்தவர்கள் பாபு (55) மற்றும் சிவகுமார் (57). சிகிச்சைப் பெற்று வந்த நிசாந்த், ஊழியர்களான பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் அடிக்கடி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிசாந்தின் பேச்சால் கடும் ஆத்திரமடைந்த பாபு மற்றும் சிவகுமார் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, நிசாந்தின் கழுத்தில் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து மாங்காடு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த நிசாந்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 30-க்கும் மேற்பட்டோர். அங்கு பணியில் இருந்த காவலாளியை தாக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக தப்பியோடிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.