போதை பழக்கத்தை கைவிட சொன்ன தாயை கொலை செய்த கொடூர மகன் கைது

சென்னையில் போதை பழக்கத்தை கைவிட சொன்ன தாயை கீழே தள்ளி கொலை செய்த கொடூர மகன் கைது செய்யப்பட்டார்.
போதை பழக்கத்தை கைவிட சொன்ன தாயை கொலை செய்த கொடூர மகன் கைது
Published on

இறந்து கிடந்தார்

சென்னை ராயப்பேட்டை அங்கமுத்து தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 50). டிரைவர். இவருடைய மனைவி ஸ்ரீபிரியா (47). இவர்களுடைய மகன் ராகேஷ்வர்சன் (25). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகிறார். மகள் சுருதிலயா (20). இவர், வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ராகேஷ்வர்சன் நேற்று முன்தினம் மதியம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். தனது தாயார் பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடக்கிறார் என்று கூறினார். உடனடியாக 108 ஆம்புலன்சு சம்பவ இடத்துக்கு வந்தது. அப்போது ஸ்ரீபிரியா அருகே ராகேஷ்வர்சன் தனது 2 கைகளிலும் கத்தியால் அறுத்துக்கொண்டு ரத்த காயத்துடன் இருந்தார்.

108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர்கள், ஸ்ரீபிரியா உடலை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபிரியா உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரத்த காயங்களுடன் இருந்த ராகேஷ்வர்சன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

மகன் கைது

இந்த நிலையில் பாபு, தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பிரியாவின் பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராகேஷ் வர்ஷனிடம் போலீசார் விசாரித்த போது, அவர்தான் கொலையாளி என்பது தெரிய வந்தது.

ராகேஷ் வர்ஷன் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரிகிறது. இதனை ஸ்ரீபிரியா கண்டித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராகேஷ் வர்ஷனை பிரியா கடுமையாக கண்டித்துள்ளார். அப்போது போதையில் இருந்த ராகேஷ் வர்ஷன் தாய் என்றும் பாராமல் ஸ்ரீபிரியாவின் தலையை பிடித்து பின்பக்கமாக வேகமாக தள்ளி உள்ளார். இதில் சுவற்றில் மோதி மயங்கி விழுந்து ஸ்ரீபிரியா இறந்து உள்ளார்.

தாயாரை அடித்துக்கொன்ற பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக தனது கையை அறுத்துக்கொண்டு நாடகமாடி இருக்கிறார். பெற்ற தாயை கொன்ற கொடூர மகன் ராகேஷ் வர்ஷன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com