ஜல்லிக்கட்டு வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்

காளைகளுக்கு எந்த கொடுமையும் செய்யப்படுவதில்லை; நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்
Published on

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின்போது மதுரை பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிற ஜல்லிக்கட்டு, பொழுதுபோக்கு அல்ல; இது தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.

சுப்ரீம் கோர்ட்டு தடை

ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது.

இது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெருமளவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு பலவிதமான போராட்டங்களை நடத்தினர். சென்னையில் மெரினா கடற்கரையில் நடந்த போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

தமிழக அரசு சட்டம்

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகைசெய்து தமிழகத்தில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)-2017 என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண்பதற்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல, வெளிநாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர்.

இதனால் ஜல்லிக்கட்டு காளைகளை தமிழகத்தில் பலரும் போட்டி போட்டு வளர்த்து வருகின்றனர். செயற்கை கருவூட்டலுக்கு அனுமதிக்கப்படுகிறஇன்றைய நவீன உலகில், இந்த ஜல்லிக்கட்டு காளைகளால் நாட்டு மாட்டினம் பாதுகாக்கப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

ஆனால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்து கொண்டு வந்துள்ள விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)-2017-ஐ எதிர்த்து 'பீட்டா', பிராணிகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் என பல தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.

இந்த வழக்குகளை ஒரே வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டது.

தமிழக அரசு தாக்கல்

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதத்தை மூத்த வக்கீல் கபில் சிபல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், அரசியல் சாசனத்தை மீறியதல்ல.

* அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரிக்க முடியாதவை. ஏனென்றால், அவை குடிமக்களின் அல்லது நபர்களின் அடிப்படை உரிமை மீறல் பற்றிய கேள்விகளை எழுப்பவில்லை. ஜல்லிக்கட்டுக்காக காளைகள்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. அரசியல் சாசனத்தின்கீழ் பிராணிகளுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவில்லை.

காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை

* கொள்கை ரீதியிலான விஷயங்களில் அரசு இயற்றுகிற சட்டத்தில் கோர்ட்டு தங்கள் சொந்த அளவீட்டைக் கொண்டு மாற்ற முடியாது.

* ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்பது முற்றிலும் தவறான வாதம் ஆகும். காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை.

* ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு கால கட்டத்திலும் அரசு அதிகாரிகளால் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் (எஸ்.ஓ.பி.) வழங்கப்படுகின்றன. புதிய சட்டத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

கண்காணிப்பில்தான் ஜல்லிக்கட்டு

* ஜல்லிக்கட்டு, இந்திய விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, போலீஸ், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரின் தீவிர கண்காணிப்பில்தான் நடத்தப்படுகிறது. இந்த கலாசார விளையாட்டில் காளைகளை கொடுமைப்படுத்துதல் என்பது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டின்போது பாதகமான விளைவுகளை முடிந்தளவுக்கு குறைப்பதில் அரசு வெற்றி கண்டுள்ளது.

நாட்டு மாடுகளுக்கு பாதுகாப்பு

* ஜல்லிக்கட்டு இருப்பதால்தான் காளை மாடுகளை வளர்ப்பது உறுதி செய்யப்படுகிறது. அப்படியில்லாவிட்டால் பால் கிடைக்குமே என்கிற பொருளாதார பலன்களுக்காக பசு மாடுகள் வளர்ப்பில்தான் முன்னுரிமை வழங்குவார்கள். ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்க்கப்படுவதால், அது நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுவதையும் மேம்படுத்துகிறது.

* எனவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், காளைகளை கொடுமைப்படுத்துவதல்ல, அரசியல் சாசனத்தை மீறியதும் அல்ல. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com