கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்தவர் மாங்கிலால் (வயது 49). இவர், பாதிரிவேடு அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது கடையின் இரும்பு கதவு மற்றும் ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சித்து உள்ளனர். அது முடியவில்லை. இதனையடுத்து கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை மட்டும் திருடிச் சென்றனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் கழற்றி சென்றனர்.

அதே போல அருகே உள்ள சுமன் (39) என்பவரின் பேன்சி கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கல்லாவை உடைத்து அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரத்தை அள்ளிச் சென்றனர். ஒரே நாள் இரவில் அத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com