நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தாராபுரம் அருகே விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

ரூ.21 லட்சம் நஷ்டஈடு

திருப்பூர் செரங்காட்டை சேர்ந்த காளிதாஸ் (வயது44) தொழிலாளி, இவருடைய மனைவி காயத்திரி (25) இவர் கடந்த 3.5.2016-ந்தேதி தாராபுரம்- திருப்பூர் பைபாஸ் சாலையில் பழனி பாதயாத்திரைக்கு நடைபயணம் மேற்கொண்டபோது திருப்பூரில் இருந்து மதுரை செல்ல தாராபுரம் நோக்கி வந்த போது குண்டடம் வெங்கிட்டிபாளையம் அருகே காயத்திரி மீது அரசு பஸ் மோதியதில் காயத்திரி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இறந்த மனைவி காயத்திரிக்கு நஷ்ட ஈடு கோரி தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கணவர் காளிதாஸ் (44),மகன் முத்துசஞ்சய் (7) ஆகியோர் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை தாராபுரம் வக்கீல் எஸ்.டி.சேகர் வாதாடி வந்தார். வழக்கை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி (பொறுப்பு) பி.ஸ்ரீகுமார் பிறப்பித்த உத்தரவில் விபத்தில் இறந்த காயத்திரிக்கு நஷ்ட ஈட்டு தொகை ரூ.21 லட்சத்து 54 ஆயிரத்தை கணவர் காளிதாசுக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

நிறைவேற்று மனு

அந்த உத்தரவு நகல் கோவை மண்டல போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் அனுப்பியது. கோவை அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈட்டு தொகையை உரிய காலத்தில் மனுதாரான காளிதாசுக்கு செலுத்தவில்லை.

இதனால் காளிதாஸ் நிறைவேற்று மனு ஒன்றை மீண்டும் தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தீர்ப்புப்படி தொகைக்கு வட்டியுடன் சேர்த்து மனுதாரர் காளிதாசுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.32 லட்சத்து 70 ஆயிரத்தை வழங்க, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு பஸ் ஜப்தி

கோவை அரசு போக்குவரத்து கழகம் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டனர். இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஈரோட்டில் இருந்து பழனி செல்ல 12 மணிக்கு தாராபுரம் புதிய பஸ் நிலையம் வந்த அரசு பஸ்சை நீதிமன்ற அமீனா சுதாமணி ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com