

நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இந்த நிலையில், நெல்லை கருப்பனூத்து வடக்கு அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதம்பி துரை. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரை பணியிலிருந்து கடந்த மே மாதம் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஸ்ரீதம்பிதுரை நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தனக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கூறி கதறி அழுதார். அங்கு நின்ற போலீசார் அவரை அழைத்து சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்க செய்தனர்.
இதுகுறித்து கண்டக்டர் ஸ்ரீதம்பிதுரை கூறுகையில், ”25 வருசமா பஸ் ஓட்டுறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கு. ஏ.எம். (அதிகாரி) குமார் என்பவர் நான் நீண்ட நாட்களாக வேலையில் இருப்பதாக கூறி பணியில் இருந்து என்னை இறக்கிவிடுகிறார். வேலை இல்லாததால் எனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.
ஜூன் 19-ம் தேதி எந்த காரணமும் இன்றி தன்னை பணியில் இருந்து நீக்கினர். தற்காலிக நடத்துநர் பணியை மீண்டும் கேட்டதற்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணி வாங்கி தருவதாக அதிகாரி குமார் கூறிகிறார்.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் ஜாதிய பாகுபாடு உள்ளது. குமார் என்பவரை தவிர்த்து அனைத்து ஊழியர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். வேலை கேட்டு அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.