

தஞ்சாவூர்,
தஞ்சை-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின்னர் தனியார் பஸ்களின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் தமிழகஅரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவை ஏற்று கடந்த ஆண்டு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அது தொடர்பான கருத்துக்களை பெற்றனர். ஆனால் அதன்பிறகு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நடை பெற்று வருகிறது. இதற்கிடையில் சில தனியார் பஸ்களில் தன்னிச்சையாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதால் தனியார் பஸ்களில் அதிகம் பேர் பயணம் செய்தனர்.
தமிழக அரசின் வெற்றி பயண திட்டத்தால், பெண் கள் பலரும் அரசு பஸ்களில் பயணம் செய்ய தொடங்கிவிட்ட தால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் தனியார் பஸ்களில் ஆண்கள் பயணம் செய் வதுடன் குறைவான பெண்கள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். இதனால் தனியார் பஸ்களில் பயணிகளின் வருகை குறைந்ததால் வருவாய் குறைந்தது.
இதை ஈடுகட்டும் வகையில் சில பஸ்களின் உரிமையாளர்கள் தன்னிச்சையாகவே பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு தனியார் பஸ்களில் முன்பு ரூ.31 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.35 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு முன்பு ரூ.36 வசூலிக்கப்பட்ட நிலையில் தற் போது ரூ.40 ஆக வசூலிக்கப்படுகிறது. திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பயணிகள் சிலர் கூறும்போது. முன்பெல்லாம் தஞ்சை-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் தனியார் பஸ்களில் அதிகளவில் பொதுமக்கள் பயணம் செய்வார்கள். தற்போது தமிழக அரசின் வெற்றிப் பயணத்தால், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால், தனியார் பஸ்களை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் இல்லாமல் உள்ளது. திடீரென உயர்த்தப்பட்ட இந்த கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.
இது குறித்து தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் கூறும் போது, தமிழக அரசின் வெற்றிப் பயணத்தால், பெண்கள் பெருமளவு தனியார் பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அன்றாடம் டீசல் நிரப்பவும், பணியாளர்களுக்கு சம்பளம் உள்பட இதர செலவுகளை கூட ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
அரசிடம் பஸ் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளோம். ஆனால், ஒரு சில பஸ்களில் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசிடம் அறிவிப்பு வரும் வரை கட்டணம் உயர்த்த வேண்டாம் என நாங்கள் பணியாளர்களிடம் கூறியுள்ளோம். எங்களது நிலையை உணர்ந்து அரசு பஸ்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்றனர்.