

ஒசூர்,
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், காவிரி விவகாரத்தில் எல்லைப் பகுதியில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் பஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் எல்லை பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேவேளையில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பஸ்கள் வழக்கம்போல தடையின்றி இயங்கி வந்தன.
மற்றபடி கார், சரக்கு வாகனங்கள் வழக்கமாக சென்று வந்தன. ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகள் தமிழக மாநில எல்லை வரை செல்லும் நகர பஸ்களில் சென்று அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அத்திப்பள்ளிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்றனர். தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஓசூர் - பெங்களூரு இடையே கன்னட அமைப்பினர் போராட்டம் காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் தொடங்கியது