இன்று வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு: வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை; பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு: வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை; பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
Published on

அன்றாட சேவை

கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போக்குவரத்து கழகம் என்பது, அத்தியாவசிய பொது சேவை நிறுவனமாகும். போக்குவரத்து வசதியை முழுவதுமாக பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம் என்பதும், பொதுமக்களுக்கு அன்றாடம் சேவை செய்யக்கூடிய முக்கியமான பொறுப்புள்ள நிறுவனம் என்பதும் தொழிலாளர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து கழகம் நாள்தோறும் பஸ்களை தவறாமல் இயக்குகின்றன. தொழில் தகராறு சட்டப்படி வரையறுக்கப்பட்ட பொதுசேவை நிறுவனங்களில் போக்குவரத்துக் கழகமும் ஒன்று.

அத்தியாவசிய சேவைக்குரிய நிறுவனம் என்பதால் போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே தொழிலாளர் அனைவரும் இன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அன்றைய தினங்களில் விடுப்பு எதுவும் அனுமதிக்கப்படாது.

இன்று முதல் ஏற்கனவே அனுமதி பெற்றவர்களுக்கு அந்த விடுப்பு ரத்து செய்யப்படுகிறது. எனவே பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

இன்று முதல் பணி ஓய்வு, வார ஓய்வு, மாற்றுப் பணி ஓய்வு எடுக்க அனுமதி பெற்றவர்களுக்கு ஓய்வு ரத்து செய்யப்பட்டு, பணிக்கு திரும்பும்படி அறிவிக்கப்படுகிறது. அதற்கான மாற்று ஓய்வு மற்றொரு நாளில் வழங்கப்படும். வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்கு வராதவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற எச்சரிக்கை கடிதத்தை மற்ற போக்குவரத்து கழகங்களும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com