

காஞ்சீபுரம்,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் பணிமனையில் உள்ள 90 பஸ்களில் 25 பஸ்கள் மட்டுமே நேற்று ஓடின. மீதி பஸ்கள் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. எனினும் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க வசதியாக தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களும் இயக்கப்பட்டன. அவைகள் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்றன.
வெளியூர்களில் இருந்து காஞ்சீபுரம் பஸ் நிலையம் வந்த பயணிகள் பலர், தங்களின் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டனர். மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பயணிகளிடம் விசாரித்து, பயணிகள் அதிகமாக உள்ள ஊர்களுக்கு உடனடியாக தனியார் மற்றும் பள்ளி பஸ்களை அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
சென்னைக்கு கூடுதல் பஸ்
சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருப்பதி, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களுக்கு அதிக அளவிலான பயணிகள் தினந்தோறும் செல்வதால் அந்த பகுதிகளுக்கு அதிக அளவிலான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், வெற்றிச்செல்வன், சரவணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
2 மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு
தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி நேற்று அதிகாலை மாநகர பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராஜேந்திரன் (வயது 51) ஓட்டினார். கூடுவாஞ்சேரி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இதேபோல் ஆலந்தூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்த மற்றொரு மாநகர பஸ்சை டிரைவர் ராமச்சந்திரா (53) ஓட்டி வந்தார். ஊரப்பாக்கம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இந்த கல்வீச்சு சம்பவத்தில் நல்லவேளையாக 2 பஸ்களில் இருந்த பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் யாராவது, பஸ்கள் மீது கல்வீசி தாக்கினார்களா? என விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, மாதவரம், பாடியநல்லூர், எண்ணூர், அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, அய்யப்பன்தாங்கல், திருவொற்றியூர், திருவள்ளூர் ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து மொத்தம் உள்ள 951 பஸ்களில் 288 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
திருவள்ளூரில் உள்ள பணிமனையில் இருந்து மொத்தம் உள்ள 58 பஸ்களில் 41 பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியில் இருந்து சில தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை வரவழைத்து இந்த பஸ்கள் இயக்கப்பட்டது. தனியார் பஸ்களும் வழக்கம் போல் ஓடின. ஓடாத அரசு பஸ்கள், திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
திருவள்ளூர் பணிமனையில் இருந்து பஸ்கள் இயங்குவதை நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து பார்வையிட்டார். அவருடன் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, திருவள்ளூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளைமேலாளர் கே.ஸ்ரீதர், வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் காவேரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை பணிமனையில் மொத்தம் 40 பஸ்கள் உள்ளன. நேற்று 7 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பஸ் பணிமனை எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் ஷேர் ஆட்டோக்கள், வேன்களில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் நிலை காணப்பட்டது.
பொன்னேரி
பொன்னேரி பணிமனையில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று 35 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. மீதம் உள்ள 15 பஸ்களை இயக்குவதற்காக புதிதாக டிரைவர்கள், கண்டக்டர்களை பணியில் சேர்ப்பதற்காக நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க.(அம்மா) எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், சப்கலெக்டர் தண்டபாணி, தாசில்தார் தமிழ்செல்வன், துணை தாசில்தார் ரஜினிகாந்த் ஆகியோர் பணிமனைக்கு நேரில் வந்து பஸ்கள் இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது விழுப்புரம் கோட்ட மேலாளர் சுகுமாறன், பொன்னேரி பணிமனை மேலாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலேயே பொன்னேரி பணிமனையில் இருந்துதான் அதிகளவிலான பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிதாக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு மீதம் உள்ள பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.