பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம்: அனைத்து கட்சியினர் 6–ந்தேதி கூடி முடிவு; மு.க.ஸ்டாலின் தகவல்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய 6–ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin
பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம்: அனைத்து கட்சியினர் 6–ந்தேதி கூடி முடிவு; மு.க.ஸ்டாலின் தகவல்
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர் நோட்டு புத்தகங்கள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை திரு.வி.க.நகரில் உள்ள எஸ்.ஆர்.பி.கோவில் தெருவில் பாழடைந்த பங்களா போன்று காட்சியளித்த சமூக நலக்கூடத்தை சீரமைத்து நவீன திருமண மண்டபமாக மாற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏறக்குறைய ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்து, நவீன திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சிக்கு கடிதம் தந்திருக்கிறேன்.

ஆனால், சில சட்டவிதிகளை எல்லாம் அதிகாரிகள் சுட்டிக்காட்டி, அதனை கட்ட முடியாது என்று தெரிவித்தார்கள். எனவே, நான் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகமே முன்வந்து, திருமண மண்டபம் கட்டுவதற்கான ஒப்பந்தம் வெளியிட்டு உள்ளது. இன்னும் ஒருவாரத்தில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, ஒரு மாதத்தில் புதிய கட்டிடம் கட்டும்பணி தொடங்கும்.

கர்நாடக மாநில முதல்மந்திரியை, தமிழக முதல்அமைச்சர் சந்திக்கப் போவதாக செய்தி வெளியாகி இருப்பது உள்ளபடியே வரவேற்கப்பட வேண்டியது. தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும், தமிழக விவசாய சங்க நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று, கர்நாடக முதல்மந்திரிக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, சிறிது பயனிருக்கும் என்பது எனது நம்பிக்கை.

அதுமட்டுமல்ல, தேவைப்பட்டால் இங்கிருக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்அமைச்சர் ஒன்று திரட்டி, டெல்லிக்கு அழைத்துச்சென்று, பிரதமரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்தப்போக்கை உடனே கைவிடுவதோடு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

மீண்டும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, தொடர்ந்து போராட்டங்களை பல்வேறு விதங்களில் முன்னெடுப்பது குறித்து ஆலோசனை செய்யவிருக்கிறோம். வருகிற 6ந்தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டி, அதன்பிறகு முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com