கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும்- பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 24 ஆம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார்.
கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும்- பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்
Published on

சென்னை,

கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  இதனால்,  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அங்கே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மாதம் 30 -ம் தேதி இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்பி வருகின்றன. வரும் 24 ஆம் தேதிக்குக் பிறகு ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரெயில் நிலையம் வரும் வரை இதே நிலை இருக்கும் என்றும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com