

சென்னை
தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலைமறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ & மாணவிகள் இன்று திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப் பட்டிருந்தது.
இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனவே மாணவர்கள் பஸ் கட்டண உயர்வின் பாதிப்பை உணர்ந்தனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்.
* திருப்பூரில் அரசு சிக்கண்ணா கலை கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் திரண்டனர்.
* தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு எதிராக வாக்குகள் பெறும் இயக்கம் தொடக்கம். கோவை அரசு மருத்துவமனையின் முன்பு நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளுடன் போராட்டம்.
* விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம்.
* நாகை புத்தூர் பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பொன்னேரி பஸ்நிலையம் அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர்.
* கோவை மாவட்டம் சூலூரில் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் ஒத்தக்கடையில் அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.
* திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 2-வது பஸ் நிறுத்தம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
#Students #RoadBlockade #Protest #BusFareHike