நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரம் பாதிப்பு

மழை தாக்கம் குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்களை விரைவில் திறக்க வாய்ப்புள்ளது.
நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரம் பாதிப்பு
Published on: 

கூடலூர்,

நீலகிரியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மற்றும் கோத்தகிரி வழியாக செல்லும் சாலைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் அரசு பஸ், சுற்றுலா பஸ்கள் சிக்கியது. பஸ்சை மண் அமுக்கியதில், அதில் இருந்த அரசு பஸ் டிரைவர் பலியானார். கண்டக்டர், சுற்றுலா பயணிகள் 250-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு கருதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணி மேற் கொள்வதற்காக போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோத்தகிரி வழியாக செல்லும் சாலையில் பகல் நேரத்தில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

சுற்றுலா தலங்கள் மூடல்

இதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நீலகிரிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், ஊசிமலை காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், நாடுகாணி மரபியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில்

மழையின் தாக்கம் பரவலாக குறைந்துள்ள நிலையில், ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை சீரமைப்பு பணி முடிவடையாததால், இன்னும் சில நாட்கள் அந்த சாலையில் செல்ல போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

விரைவில் திறக்க வாய்ப்பு

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது. சுற்றுலா தலங்களை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மூடி வைக்கப்படும். மேலும் மழை தாக்கம் குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்களை விரைவில் திறக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com