யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த வியாபாரி கைது

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. பிரசவம் பார்த்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த வியாபாரி கைது
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 32). மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வமுடையவர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் கோமதி (28) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் டிசம்பர் மாதம் 13-ந்தேதி பிரசவத்திற்காக நாள் குறித்துள்ளனர். ஆனால் டாக்டர்கள் கொடுத்த தேதியில் கோமதிக்கு பிரசவத்திற்கான எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. கடந்த 18-ந்தேதி மாலை பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வலரான லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க, தனது அக்காவை உதவிக்கு அழைத்து, சமூக வலைதளமான யூடியூப் சேனலை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

கணவன் கைது

இதில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கோமதிக்கு பிரசவமானது. ஆனால் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

மேலும் கோமதிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் மனைவியை குழந்தையுடன் புன்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து புன்னை அரசு மருத்துவர் மோகன்குமார் நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூடியூப் சேனலை பார்த்து பிரசவம் மேற்கொண்ட லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com